Tuesday 7th of May 2024 08:26:44 AM GMT

LANGUAGE - TAMIL
-
21 வாரங்களில் 420 கிராம் எடையுடன் பிறந்து  உயிர்வாழும் குழந்தை - கின்னஸ் சாதனையாக பதிவு!

21 வாரங்களில் 420 கிராம் எடையுடன் பிறந்து உயிர்வாழும் குழந்தை - கின்னஸ் சாதனையாக பதிவு!


அமெரிக்காவைச் சோ்ந்த கர்டிஸ் மீன்ஸ் என்ற குழந்தை 21 வாரங்கள் மற்றும் ஒரு நாளில் 420 கிராம் என்ற மிகக் குறைந்த எடையுடன் பிறந்து, உயிர் பிழைத்த குழந்தையாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

கர்டிஸ் மீன்ஸ் கடந்த ஆண்டு அலபாமாவின் பர்மிங்காமில் வெறும் 420 கிராம் (14.8 அவுன்ஸ்) எடையுடன் பிறந்தான். தற்போது 16 மாதமாகும் கர்டிஸ் மீன்ஸ் உலக சாதனைக் குழந்தையாக உறுதிப்படுத்தப்பட்டு கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக முழுமையான கர்ப்பகாலம் என்பது 40 வாரங்கள் ஆகும். கர்டிஸ் மீன்ஸ் பொதுவான கர்ப்பகாலத்துக்கு 19 வாரங்கள் முன்கூட்டியே பிறந்தான்.

அவரது தாயார், மிச்செல் பட்லர் பிரசவ வலியுடன் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை -4 ஆம் திகதி மருத்துவமனைக்குச் சென்றார்.

மறுநாள் கர்டிஸ் மற்றும் சி'ஆஸ்யா என்ற இரட்டைக் குழந்தைகளை அவா் பெற்றெடுத்தார். சி'ஆஸ்யா என்ற பெண் குழந்தை பிறந்த மறு நாளே இறந்தது.

உயிர் பிழைப்பதற்கான ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் கர்டிஸ் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்தான்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியே வந்தாலும் 275 நாட்கள் மருத்துவமனையில் இருந்து இவ்வாண்டு ஏப்ரல் மாதமே குழந்தையும் தாயும் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, 16 மாதங்கள் ஆனபோதும் இன்றுவரை இக்குழந்தைக்கு ஒக்ஸிஜன் மற்றும் உணவுக் குழாய் தேவைப்படுகிறது. எனினும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

"கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நான் பல பிரசவங்களைப் பார்த்துள்ளேன். ஆனால் 21 வாரங்களில் பிறந்த குழந்தையை நான் பார்த்ததில்லை. அவ்வாறு பிறந்தாலும் உயிர் பிழைப்பது கடினம் என அவனது பிரசவத்தின்போது உடனிருந்து மேற்பார்வையிட்ட அலபாமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிரையன் சிம்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுவரை உலகில் மிகக் குறைந்த வாரங்களில் பிறந்த குழந்தையாக கனடாவின் ஒட்டாவாவில் பிறந்த ஆண் குழந்தை உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. 21 வாரங்கள் மற்றும் ஐந்து நாட்களில் இந்தக் குழந்தை பிறந்தது. தற்போது 34 ஆண்டுகளின் பின் இந்தச் சாதனையை கர்டிஸ் மீன்ஸ் முறியடித்துள்ளான்.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE